பாரத்சேனா மது பாட்டி ல்களுடன், மனு…

கோவை கலெக்டர் அலுவலகத்தில்

coimbatore
Advertisement

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்களின் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் பலர் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர்.

அப்போது பாரத்சேனா மாநகர் மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் துரைராஜ் தலைமையில் நிர்வாகிகள் கையில் மதுபாட்டில்களுடன் வந்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திடீரென்று மதுபாட்டில்களை உடைத்து தரையில் மதுவை கொட்டியபடி அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர்.அவர்களை போலீசார் தடுத்து, மதுபாட்டில்களை பிடுங்கிக்கொண்டு அவர்களை கலெக்டர் அலுவலகத்துக்குள் மனு கொடுக்க அனுமதித்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

இந்திய கலாசாரத்துக்கு எதிராக ஆங்கில புத்தாண்டு என்ற பெயரில், விடுதிகளில் நடனம் மற்றும் மது விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதற்கு தடை விதிக்க வேண்டும்.

நள்ளிரவில் பட்டாசு உள்ளிட்டவைகளை வெடிக்க கூடாது. நள்ளிரவில் போதையுடன் சுற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதிகளில் மதுவிருந்துடன் கேளிக்கை நடன நிகழ்ச்சி நடைபெற்றால் முற்றுகையிடுவோம்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தமிழ்ப்புலிகள் அமைப்பு சார்பில், கைவிலங்கு மற்றும் வாயில் கருப்பு துணி கட்டியவாறு பொதுச்செயலாளர் இளவேனில் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.

அந்த மனுவில், ‘அம்பேத்கர் மற்றும் பெரியார் நினைவுநாளை முன்னிட்டு கடந்த 17–ந்தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டோம்.

ஆனால் போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதேபோன்று செகுடந்தாளி முருகேசன் நினைவு நாள் கூட்டத்தை நடத்த உக்கடம் போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். கோவையில் பேச்சுரிமை மறுக்கப்பட்டு வருகிறது.

ஜனநாயக உரிமையை பாதுகாக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

கோவைசூலூர் ராசிபாளையத்தை சேர்ந்த ஜி.பாலசுப்பிரமணியன் தலைமையில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

சூலூர் ராசிபாளையத்தில் உள்ள நொய்யல் ஆற்றின் கரையில் கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவில் நீர் வழித்தடத்தை மறித்து கட்டப்பட்டு உள்ளது.

அதேபோல நீர் வழிப்பாதையில் ஆழ்துளைக் கிணறும் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்தக் கோவிலில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக வண்டித்தடத்தை மறைத்து கட்டுமானப் பொருட்களை குவித்து வைத்துள்ளனர். இது போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. ஆகவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119