அமைச்சில் நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்: இராதாகிருஸ்ணன்

இலங்கை

Advertisement
Advertisement

அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது அல்ல எங்களுடைய நோக்கம் அரசாங்கத்தில் இருந்து கொண்டு குறைகளை சுட்டிக்காட்டி எங்களுடைய மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டியவற்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஒரு சில ஊடகங்கள் அரசாங்கத்தில் இருந்து தான் வெளியேறுவதாக பிழையான செய்தியை பிரசுரித்துள்ளமை தொடர்பாக விளக்கம் அளிக்கும் பொழுதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்

இந்த அரசாங்கத்தை அமைப்பதற்காக நாங்கள் எங்களுடைய அமைச்சு பதவிகளையும் துறந்துவிட்டு வெளியில் வந்தவர்கள்.எனவே இந்த அரசாங்கத்தின் மூலமாக எங்களுடைய மக்களுக்கு அதிகமாக எதனை பெற்றுக் கொள்ள முடியுமோ அதனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும்.அதற்காகவே நாங்கள் அரசாங்கத்தின் அங்கமாக இருந்து கொண்டு குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்வதற்கு முயற்சி செய்து கொண்டு வருகின்றோம்.

தமிழ் முற்போக்கு கூட்டணி

அரசாங்கத்தில் இருப்பதனாலோ அல்லது கல்வி இராஜாங்க அமைச்சராக இருப்பதனாலோ அரசாங்கத்திலும் எமது அமைச்சிலும் நடக்கின்ற பிழைகளை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.எங்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் முழுமையான கருத்து சுதந்திரம் இருக்கின்றது.அதுவே நல்லாட்சியின் குணாம்சமாகும்.

வேறு சில அமைச்சர்களும் தாங்களுடைய அமைச்சில் உள்ள பிரச்சினைகளை கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.அதற்கு காரணம் அவர்கள் அமைச்சில் இருந்து வெளியேறுவதாக கருத முடியாது.அந்த பிழைகளை திருத்தி அமைத்து ஒரு நல்ல சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அதனையே நானும் செய்கின்றேன்.

எங்களுடைய அமைச்சில் பல குறைபாடுகள் இருக்கின்றது.தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது.இதனை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.எனக்கு அதிகாரங்கள் வர்த்தமாணி அறிவித்தல் மூலம் வழங்கப்பட்டுள்ளது.இதனை நடைமுறைபடுத்த அதிகாரிகள் ஒத்தழைக்க வேண்டும்.ஆனால் அதிகாரிகள் ஒத்துழைப்பது இல்லை.எல்லாமே மந்த கதியில் நடைபெறுகின்றது.இதனால் நான் அமைச்சர் என்ற வகையில் பல சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

மக்களுக்கு விரைவான சேவைகளை வழங்க வேண்டும்.அதனையே மக்களும் எதிர்பார்க்கின்றார்கள்.எங்களை பொறுத்த அளவில் கல்வியில் நாங்கள் தற்பொழுது படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகின்றோம்.அதனை இன்னும் விரைவாக செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.

எனது அமைச்சில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பலபிரச்சினைகளை கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் பொறுமையாக அனுகியிருக்கின்றோம்.போராட்டங்களுடனேயே எல்லா விடயங்களையும் செய்ய வேண்டியிருக்கின்றது.இதனை தொடர்ந்து செய்ய முடியாது.எனவேதான் நான் குறiபாடுகளை சுட்டிக் காட்டினேன்.இதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

இது தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களிடமும்,முஸ்லிம் அமைச்சர்களிடமும் ஏனையவர்களிடமும் கலந்துரையாடவுள்ளேன்.விசேடமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் எனக்கு தாங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.இது எனது தனிப்பட்ட பிரச்சினை இல்லை.இது ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினையாகும்.எனவே தமிழ் அமைச்சர்கள் முஸ்லிம் அமைச்சர்கள்,தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செய்திகள்:- இலங்கையிலிருந்து நமது சிறப்பு செய்தியாளர் 

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119