தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

0
196
raasi Palangal
Advertisement
Advertisement

ஸ்வஸ்தி ஸ்ரீ மங்களகரமான விளம்பி வருஷம் சித்திரை மாதம் 1-ம் தேதி (14-04-2018) சனிக்கிழமை காலை 08-13 க்கு அதாவது சூரிய உதயாதி நாழிகை 5-30 க்கு ரிஷபலக்கினத்தில் கும்ப நவாம்ச லக்கினத்தில் மங்களகரமான விளம்பி வருஷம் பிறக்கிறது.

விளம்பி வருஷத்திய நவநாயகர்கள்

ராஜா            –    சூரியன்
மந்திரி        –    சனி
சேனாதிபதி    –    சுக்கிரன்
அர்க்காதிபதி    –    சுக்கிரன்
மேகாதிபதி        –    சுக்கிரன்
ஸஸ்யாதிபதி    –    சந்திரன்
ரஸாதிபதி        –    புதன்
நீரஸாதிபதி    –    சந்திரன்
தானியாதிபதி    –    சூரியன்

பொதுப் பலன்கள்

ராஜா சூரியனாக இருப்பதால், நாட்டில் பல இடங்களில் ஆட்சி மாற்றம் இருக்கும். கோடைக்காலத்தில் அதிக உஷ்ணம் இந்த ஆண்டு இருக்கும். சேனாதிபதி, அர்க்காதிபதி, மேகாதிபதி ஆகியவை சுக்கிரனாக இருப்பதால், மழைக்குக் குறைவில்லை.

பயிர்கள் செழித்து தானிய உற்பத்தி நன்கு விருத்தியடையும். விவசாயம் செழிக்கும். சுக்கிரனும் சூரியனுடன் சேர்ந்து குரு பார்வை பெறுவதால், பெண்களுக்குத் தேவையான துணிமணிகள், வாசனைத் திரவியங்கள், அணிகலன்கள் ஆகியவை நன்கு வியாபாரம் ஆகும்.

அவற்றின் உற்பத்தியும் பெருகும். பசுக்கள் நன்கு பால் கறந்து பால் உற்பத்தி பெருகும். கலைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெள்ளி, தங்கத்தின் விலை உயரும். இந்த ஆண்டு இரண்டு சந்திர கிரகணமும் மூன்று சூரிய கிரகணமும் ஏற்படும்.

ஒரே ஒரு சந்திர கிரகணம் மட்டும், அதாவது 27.07.2018 அன்று ஏற்படும் சந்திர கிரகணம் மட்டும் இந்தியாவில் தெரியும். மற்ற கிரகணங்கள் இந்தியாவில் தெரியாது.

இந்த ஆண்டு சனிப் பெயர்ச்சி கிடையாது. ஆண்டு முழுதும் தனுசு ராசியிலேயே அவர் சஞ்சாரம் செய்கிறார்.

குரு, 11.10.18 அன்று துலாமில் இருந்து விருச்சிகத்துக்கும், ராகு கேதுக்கள் 6.3.2019 அன்று முறையே கடகத்திலிருந்து மிதுனத்துக்கும், மகரத்திலிருந்து தனுசுக்கும் பெயர்கிறார்கள்.

இந்த ஆண்டு ஆதாயம், விரயம் கணக்குப் பார்க்கும்போது, ஆதாயம் 65-ஆகவும் விரயம் 59-ஆகவும் இருக்கிறது.

விரயத்தைவிட ஆதாயம் அதிகம் இருப்பதால், செலவைவிட வரவு அதிகமாக இருக்கும். இது ஒரு நிம்மதியான செய்தி.

இந்த ஆண்டு ரிஷப லக்கினத்தில் ஆண்டு பிறக்கிறது. லக்கினத்துக்கு 8-ம் இடத்தில் செவ்வாய், சனி இருப்பதால், இவ்வாண்டில் சனி அல்லது செவ்வாய் தசை அல்லது புத்தி நடப்பவர்கள், தங்கள் வீட்டில் ஆயுஷ் ஹோமம், மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்துகொள்வது நல்லது.

அடுத்து, 12 ராசிகளுக்கான தனிப்பட்ட பலன்களைப் பார்ப்போம்.

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)

அஷ்டமத்துச் சனியின் பாதிப்பால் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, இந்த வருடம் அதன் பிடியிலிருந்து விடுபட்டதற்காக நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

ஜென்ம ராசிக்கு குரு பார்வை இருப்பதால், வரும் கஷ்டங்கள் யாவும் சூரியனைக் கண்ட பனியென விலகும்.

சித்திரை மாதம், கலைஞர்களுக்கு ஒரு ஆதரவான மாதம். அவர்கள் திறமைகள் வெளிப்பட்டு மற்றவர்களால் மதிக்கப்படும்.

ராசி அதிபதியாகிய செவ்வாய் 9-ம் வீட்டில் சனியுடன் சேர்ந்து இருப்பதால், வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று விழைபவர்களுக்கு இது ஒரு ஆதரவான மாதம். அவர்கள் விருப்பம் நிறைவேறும் மாதம்.

வைகாசி மாதம், இந்த ராசிக்காரர்கள் தங்கள் உடல் நலத்தை கவனித்துக்கொள்ள வேண்டிய மாதம். ராசிக்கு 6-ம் அதிபதியாகிய புதன் இந்த ராசியில் சஞ்சாரம் செய்வதால் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகும்.

அதேபோல், ஐப்பசி மாதமும் இந்த ராசிக்காரர்களுக்கு உடல் நிலை பாதிப்புக்கு உள்ளாகும். அப்போது 6-ம் வீட்டுக்குரிய புதனின் நேர்பார்வை இந்த ராசிக்குக் கிடைக்கிறது.

ஆகவே இந்த ராசிக்காரர்கள் இந்த மாதங்களில் தங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நலம்.

வீடு கட்டவேண்டுமென்ற அவா எல்லோருக்கும் எழக்கூடியதே! எவ்வளவு முயன்றும் அது முடியாமல்போவது மிகுந்த மனத் தளர்ச்சியைக் கொடுக்கும்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஐப்பசி மாதம் முடிய, உங்களுக்கு வீடுகட்ட அனுகூலமான காலமாக இருப்பதால், அது சம்மந்தமான எண்ணம் உடையவர்கள் தங்கள் முயற்சியைத் தொடரலாம். உங்கள் முயற்சி பலிதமாகும்.

புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் வாகனங்களில் செல்வோர் கவனத்துடன் செல்ல வேண்டிய காலமிது. உடல் காயங்கள் ஏற்படக்கூடிய காலமிது.
கவனமாக இருப்பது நமக்கு நல்லது.

தனாதிபதியாகிய சுக்கிரன் வைகாசி, புரட்டாசி மாதங்களில் தன் சொந்த வீட்டிலேயே சஞ்சாரம் செய்கிறார். அதுவும் புரட்டாசி மாதத்தில் குருவுடன் சஞ்சாரம் செய்கிரார். அந்த மாதங்களில் திருமணத்துக்குக் காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் வருகிறது.

பொருளாதாரத்தைப் பார்க்கும்போது ஆவணி, தை மாதங்கள் சற்று நெருக்கடியைக் கொடுக்கக்கூடியவை. மற்ற மாதங்கள் பொருளாதாரம் சரளமாகவே தென்படுகிறது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, ஆனி மாதத்தில் இடமாறுதல் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம்.

புரட்டாசி முதல் மார்கழி மாதம் உள்ள காலங்களில் உங்கள் தனித்தன்மை மற்றவர்களால் போற்றப்படும். அப்போது உங்கள் கௌரவமும் சுற்றம், மற்றும் நண்பர்கள் மத்தியில் உயரும்.

இந்த ஆண்டுஆதாயம், விரயம் கணக்குப் பார்க்கும்போது, ஆதாயத்திவிட விரயமே அதிகமாகக் காணப்படுகிறது. ஆகவே செலவு அதிகரிக்கும்.

ரிஷபம்

(கார்த்திகை 2,3,4-ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ம் பாதங்கள்)

ராசியதிபதி சுக்கிரன். அவர் 12-ம் இடத்தில் சூரியனுடன் சேர்ந்து வருட ஆரம்பத்தில் இருக்கிறார். 6-ம் இடத்திலுள்ள குருவின் பார்வை வேறு சுக்கிரனுக்குக் கிடைக்கிறது. ஆக, உங்கள் உடல் நிலையில் உபாதைகள் ஏற்படக்கூடும்.

சுக்கிரனுடன் தன்வந்திரியான சூரியனும் இருப்பதால், பாதிப்புக்கள் கட்டுக்குள் இருந்து வரும். மருத்துவ உதவியுடன் உங்கள் உபாதையை வெல்லலாம். அதேபோன்று, புரட்டாசி மாதமும் உங்கள் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகும்.

வைகாசி மாதத்தில் சுக்கிரன் 2-ம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்கள் பொருளாதாரம் சரளமாக இருக்கும். ஆனி, ஆடி மாதங்களில் வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுவது நல்லது.

ஆடி, கார்த்திகை மாதங்கள் சொந்த வீட்டுக் கனவில் இருப்போருக்கு அனுகூலமான மாதங்கள். ஆக அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் உங்கள் முயற்சி பலிதமாகும்.

அதேபோன்று, நான்கு சக்கர வாகனம் வாங்க வேண்டுமென விழைவோருக்கு இது ஒரு ஆதரவான காலம். முயற்சி செய்யுங்கள். உங்கள் முயற்சி பலிதமாகும்.

படிக்கும் மாணவர்களுக்கு ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, பங்குனி மாதங்கள் அனுகூலமாகத் தெரிகின்றன. இந்த மாதங்களில் வரும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.

தை மாதம் மாணவர்கள் தங்கள் கல்வியில் சற்று அதிகப்படியாக கவனத்துடன் இருத்தில் அவசியம்.

அடுத்து, வேலை தேடுபவர்கள். படித்துவிட்டு வேலை தேடும் படலத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு வைகாசி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்கள் அனுகூலமாக இருக்கின்றன.

அப்போது அவர்கள் கூடுதல் முயற்சி செய்தால் அவர்கள் முயற்சிக்குப் பலன் கிடைக்கும்.

பொருளாதாரத்தைப் பார்க்கும்போது, சித்திரை, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மாசி, பங்குனி மாதங்கள் மிக்க அனுகூலமாக இருக்கின்றன. அந்தக் காலங்களில் பணப்புழக்கம் மிக சரளமாக இருப்பதோடு, கொடுக்கல் வாங்கல்களும் தடையின்றி நடைபெறும்.

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 8-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். சனி பகவான் 9, 10–ம் வீடுகளுக்கு அதிபதியல்லவா! ஆக, இந்த ராசிக்காரர்களின் தகப்பனார் உடல்நிலை சற்று பாதிப்புக்கு உள்ளாகும். பிறந்த ஜாதகத்தில் ஆயுள் பாவம் நன்றாக இருப்பின் ஆயுளுக்குக் குறைவில்லை.

வேலையில் இருப்போருக்கு அதில் பல சிறு, சிறு தொந்தரவுகள் இருக்கக்கூடும். அதுவும் சனி தசை நடந்து வருவோருக்கு சனியின் பாதிப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும்.

அவர்கள் வீட்டில் “கோளறு பதிகம்” என்ற ஸ்லோகத்தைப் படித்துவரவும். இது திருஞானசம்மந்தர் பாடியது. தமிழில்தான் உள்ளது.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3,4-ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ம் பாதங்கள்)

இந்த ஆண்டுத் தொடக்கத்திலேயே குருவின் பார்வை இந்த ராசிக்குக் கிடைக்கிறது. குரு பார்க்கக் கோடிப் புண்ணியமன்றோ. இந்த ஆண்டு பணப் பற்றாக்குறை அகலும். சம்பாத்தியதைப் பெருக்கிக்கொள்வீர்கள். லாபஸ்தானமான மேஷத்தில் சூரியனும் சுக்கிரனும் இருக்கிறார்கள்.

சூரியன் 3-ம் வீட்டுக்கு அதிபதியல்லவா! அதேபோல், சுக்கிரன் 5-ம் வீட்டுக்கு அதிபதி. இவர்களுக்குக் குருவின் பார்வை வேறு இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் சகோதரராலும், தன் குழந்தைகளாலும் பலன் பெறுவர்.

ராசிக்கு 7-ல் சனியும் செவ்வாயும் சேர்ந்து இருக்கிறார்கள். 7-ம் இடம் களத்திர ஸ்தானமன்றோ! ஆக, திருமணமானவர்களுக்கு களத்திரத்திடனான உறவு சுமுகமாக இருக்காது. அவ்வப்போது பிரச்சனைகள் தலை தூக்கும்.

ஆக, குடும்பத்தில் எழும் பிரச்னைகளை நிதானத்துடனும், சாமர்த்தியமாகவும் கையாள்வது நல்லது. முடிந்தால் சனி பகவானுக்காக திருநள்ளாருக்கும், செவ்வாய்க்காக வைத்தீஸ்வரன் கோவிலுக்கும் சென்று பரிகாரம் செய்து வருவது நல்லது.

செவ்வாயின் பார்வை ராசி மேல் விழுவதால் உடலில் காயங்கள், ரணங்கள் ஏற்படக்கூடும்.

அடுத்து, இந்த ஆண்டு பொருளாதாரம் எப்படிருக்கிறதென்று பார்ப்போம். 2-ம் வீடான கடகம், தன ஸ்தானம் என்றழைக்கப்படுகிறது. அதில் ராகு இருக்கிறார்.

அவர் அநேகமாக இந்த ஆண்டு முழுவதும், அதாவது 6.3.2019 வரை கடகத்திலேயே இருக்கிறார். ராகு, மற்ற கிரகங்களின் பார்வைக்கேற்ப பலனைக் கொடுப்பார் என்றாலும், பொதுவாக நல்ல பலன்களையே கொடுப்பார்.

வீடு கட்டும் யோகம் இந்த ராசிக்காரகளுக்கு எப்படி இருக்கிறதென்று பார்ப்போம். ஆண்டின் பிற்பகுதியில் இவர்களுக்கு வீடு கட்டும் யோகம் வருகிறது. அதாவது, கார்த்திகை முதல் பங்குனி முடிய உள்ள காலம் வீடு கட்டுவதற்கு மிக்க அனுகூலமான காலம்.

அடுத்து, வேலை தேடும் முயற்சியில் இருப்போருக்கு அனுகூலமான காலத்தைப் பார்ப்போம். 10-ம் வீட்டுக்கு உரியவர் குரு. அவர் 5-ம் வீட்டில் தற்போது சஞ்சாரம் செய்கிறார். அவர் 6-ம் இடமான விருச்சிகத்துக்கு இந்த அக்டோபர் மாதம் பெயர்கிறார்.

அப்போதிலிருந்து ஆண்டு இறுதிவரை அவர் விருச்சிகத்திலேயே இருக்கிறார். இந்தக் காலம், வேலை தேடுபவர்களுக்கு மிக்க அனுகூலமான காலம்.

இந்த ராசிக்காரர்கள் திருமாலை வணங்கிவருவது அவர்களுக்கு நன்மை பயக்கும். ஸ்ரீ ராமஜெயம் எழுதும் பழக்கம் உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்கள் காணப்படுகின்றன.

SHARE