இலங்கை குறித்த ஆய்வு: ஜெனீவாவில் இலங்கைக்கு அழுத்தம்

ஜெனீவா

0
115
Advertisement
Advertisement

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்  காலகிரம ஆய்வு கூட்டத்தொடரில் பிரித்தானியாவும், ஜேர்மனியும் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை இலங்கை விவகாரம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது, நிலைமாறுகால நீதிப்பொறிமுறை உட்பட பல விடயங்கள் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்படும் என ஜெனீவாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப இலங்கை எப்போது நிலைமாற்றுக் கால நீதிபொறிமுறைகளை உருவாக்கப்போகின்றது என இலங்கையிடம் பிரித்தானியா கேள்வி எழுப்பவுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பதையிட்டும் பிரித்தானியா கேள்வி எழுப்பும்.

இதேவேளையில், பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்படுதலில் இருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனத்தை அடிப்படையாக கொண்ட சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என ஜேர்மனி இலங்கையிடம் கேள்வி எழுப்பவுள்ளது. இது தொடர்பான சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவருவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பின்னர் அது கைவிடப்பட்டது.

மூன்றாவது தடவையாக, இடம்பெறவுள்ள இந்த மீளாய்வு நேரலையான இணையத்தில் ஒளிபரப்பப்படும். கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமாகிய இந்த மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு புதன்கிழமை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மீளாய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு தேசிய கொள்கைகள், பொரளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழு ஜெனிவா செல்லவுள்ளது.

புதன்கிழமை நடைபெறவுள்ள குறித்த மீளாய்வின் போது, இலங்கை அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட தேசிய அறிக்கை, சுதந்திரமான மனித உரிமை நிபுணர்கள், குழுக்கள், சிறப்பு அறிக்கையாளர்கள், மனித உரிமை அமைப்புகள், ஏனைய ஐ.நா அமைப்புகளின் தகவல்களை உள்ளடக்கிய அறிக்கைகள், தேசிய மனித உரிமைகள் நிறுவகங்கள் பிராந்திய அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புர்களை உள்ளடக்கிய ஏனைய பங்காளிர்களின் அறிக்கைகள் என்பனவற்றின் அடிப்படையில் இந்த மீளாய்வு இடம்பெறும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள், பாதிக்கப்பட்டவர்கள், உறவினர்களுக்கான இழப்பீடு, குற்றமிழைத்தவர்களை நீதியின் முன் கொண்டு வருதல், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள், பயங்கரவாத தடைச்சட்டம், காணாமல் போனோர் பணியகத்தை நடைமுறைப்படுத்தல், உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குதல், எல்லா சமூகத்தினருக்கும் சமமான நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தல், படையினர் மற்றும் காவல்துறையினரின் கண்மூடித்தனமான கைதுகள், சித்திரவதைகள், வன்முறையைத் தூண்டும் வெறுப்புணர்வு பரப்புரைகளுக்கு நடவடிக்கை எடுத்தல்,சிறுபான்மை இன, மதத்தவர்களின் பாதுகாப்பு, பாலியல் வன்முறைகள், சிறுவர் தொழிலாளர் முறையை அகற்றுதல், வாழ்க்கைத் தர உயர்வு, உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இந்த பூகோள கால மீளாய்வு இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இதில் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பதிலளிக்கப்படும்.

செய்திகள்:- இலங்கையிலிருந்து நமது சிறப்பு செய்தியாளர் 

SHARE