மண்ணின் மைந்தர்…மாமனிதர் நம்மாழ்வார்…

கடும் பனிக்காலத்திலும்கூட சட்டை அணிய மாட்டார்.

Advertisement

டிசம்பர் 30 இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்  நிணைவு நாள்!

Advertisement

அதை தொடர்ந்து கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள கருமான்பட்டி வானகத்தில் ஜனவரி – 1ம் தேதி நம்மாழ்வார் நினைவேந்தல் நடைபெறும்.
நம்மாழ்வார் மனைவி சாவித்திரி அம்மையார் ஒளியேற்றலுடன் துவங்கும் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில்…

சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர் மற்றும் சூழலியலாளர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், சமுக செயற்பாட்டாளர் சுந்தரேசன், மற்றும் எழுத்தாளர் நக்கீரன், கவிஞர் கரிகாலன் ஆகியோர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பு செய்கிறார்கள்…!

யார் இந்த நம்மாழ்வார்? என்று கேட்பவர்களும் உண்டு..!

அவர்களுக்காவும்…! கால ஓட்டத்தில் இந்த மண்ணின் மைந்தரை எவரும் மறந்துவிடாதீர்கள் என்பதற்காகவே தான் இந்த நெடிய பதிவு.
எனது நீண்டகால பத்திரிகை பயணத்தில் என்னுள்ளே ஆழமாக பதிந்தது விட்ட மாமனிதர்.

நான்… நாம்… ஏன் அனைவரும்…! காந்தி, வினோபாஜி, விவேகானந்தர், இவர்கள் இந்த புண்ணிய பூமியில் வாழ்ந்தது காட்டியதை புத்தகத்தில் தான் படித்து  தெரிந்து கொண்டோம்.

அந்த மாமனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள் என்று நம்மிடையே வாழ்ந்தத இயற்கைவாதியை நம்முடைய இறுதி மூச்சு அடங்கும் வரை நினைவுகூறுவது நமக்கு புண்ணியம்.

லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், இயற்கை விவசாயம்பற்றிக் களமிறங்கிக் கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டுவிடம்தான்.

மேற்கத்திய நாடுகளின் விவசாய முறைகள், அங்குள்ள இயற்கை விவசாயம்குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம்செய்து வைத்தவரும் இவரே.

பாரம்பரிய விதை ரகங்களை அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார்.
அவரை அதிகம் ஈர்த்தவை ஜே.சி. குமரப்பாவின் கொள்கைகள். ‘‘டிராக்டர் நல்லாத்தான் உழும்; ஆனால் சாணி போடாதே’’ என்று ஜே.சி. குமரப்பா சொன்னதை நகைச்சுவை ததும்பத் தனது ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார் நம்மாழ்வார்.

நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர் சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிக்கிறது என்று முதன்முதலாக நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார்.

இயற்கை விவசாயம் பயணத்திற்காக தாம் பார்த்து வந்த அரசு வேலையான மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனப் பணியையும் உதறினார்.

பலரும் நினைப்பதுபோல் நம்மாழ்வார் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு எதிரானவர் அல்ல.பயோடெக்னாலஜியின் அத்தனை பரிமாணங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலம் மண்ணுக்கு, மனிதனுக்குக் கேடு ஏற்படும் என்பதால்தான் நவீன ரசாயன விவசாயத்தை எதிர்த்தார்.

கேடு விளைவிக்கும் மரபணு மாற்றுப் பயிர்களை எதிர்த்த நம்மாழ்வார், நமது பாரம்பரிய ஒட்டுரகங்களை ஆதரித்தார்.

நம்மாழ்வார் வேளாண் விஞ்ஞானி மட்டும் அல்ல… மிகச் சிறந்த சுற்றுச்சூழலியலாளரும் ஆவார். மேற்குத்தொடர்ச்சி மலையின் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார்.

சோலைக்காடுகள் இல்லை எனில், ஆறுகள் உற்பத்தி கிடையாது.சோலைக்காடுகள் இல்லை எனில், மனிதனுக்குச் சோறு இல்லை என்பதைத் தனது பிரச்சாரங்களில் வலியுறுத்திவந்தார்.

நம்மாழ்வாரின் தமிழ் பெரும்பாலும் பாமரத் தமிழ்தான். ஆனாலும், தமிழ் இலக்கியம் தொடங்கி ஆங்கில இலக்கியம் வரை அவருக்குப் பரிச்சயம். பெரியாரியம் தொடங்கி மார்க்சியம் வரைக்கும் பாமரத் தமிழில் சொன்னால்தானே ஏழை விவசாயிக்குப் புரியும் என்பார்.

தனது வாழ்நாளில் அலோபதி மருத்துவத்தை வேண்டாம் என்று ஒதுக்கியவர்,  அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஆர்வம்காட்டியவர். அதில் நிறையக் கற்றுக்கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.

நம்மாழ்வார் பகலில் பெரும்பாலும் உறங்குவது இல்லை. அவர் துயில் எழுந்தால் அது அதிகாலை 4.30 மணி என்று உறுதியாகச் சொல்லலாம்.

எழுந்ததும் வேப்ப மரப்பட்டையால் பல் துலக்கிவிட்டு, தலைகீழாக நின்று சிரசாசனம் செய்வார். பிறகு, மூச்சுப் பயிற்சி. அதன் பின்தான் அவரது வழக்கமான அலுவல்கள் தொடரும்.

கடைசி வரை இளைஞர்களை அதிகம் நம்பினார் நம்மாழ்வார். கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது வானகம் பண்ணையில் சுமார் 6,000 இளைஞர்கள் இயற்கை விவசாயப் பயிற்சியை முடித்திருக்கிறார்கள்.

மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர், கடும் பனிக்காலத்திலும்கூட சட்டை அணிய மாட்டார்.

வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைப் போராட்டங்களிலும் பயணங்களிலுமே செல விட்டார்.

எங்கு சென்றாலும் பேருந்து, ரயில் என பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தினார்; மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்தினார்.

அவரது நண்பர்கள், நலம்விரும்பிகள் அவருக்கு கார் வாங்கித் தர முன்வந்தும் “என்னால முடிஞ்சவரைக்கும் சூழல் கேட்டைக் குறைச்சுக்குறேனே” என்று தவிர்த்துவிட்டார்.

இவரின் வாழ்க்கை முறையை நமது சந்ததிகள் அனைவரும் அறியச்செய்வது ஓவ்வொருவரின் தலையாயப்பட் கடமைகளில் ஒன்றாகும்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119