நல்ல வைத்தியம்…நம்ம நாட்டு வைத்தியம்

அருகம்புல்

Advertisement

முருங்கப்பட்டை

Advertisement

வெற்றிலையை சாறு எடுத்து அந்த சாற்றில் கிராம்பை அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.

புளியம்பூவை அரைத்து கண்ணை சுற்றி பற்று போட்டால் கண்வலி, கண்ணில் ஏற்படும் சிவப்பு குறையும்.

பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக நசுக்கி தண்ணீர் விட்டு வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.

சந்தனத்தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து நெற்றியில் தடவி நன்கு காய்ந்ததும் கழுவி வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.

 கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்றுப் போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்.

இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு நீங்கும்

முருங்கப்பட்டையை அவித்து சாறு எடுத்து அதை ரசமாக்கி குடித்து வந்தால் குளிர் காய்ச்சல் குறையும்.

கொள்ளை அவித்து, நீரை வடித்து ரசம் செய்து சோற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குறையும்.

வெள்ளை நந்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும்.

மோரில் சிறிதளவு உப்பை சேர்த்து அதை ஐந்து நிமிடம் வாயில் வைத்திருந்து பின்பு கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண் குறையும்.

ஆலமரப்பட்டையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குறையும்.

 சித்தரத்தை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்து மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் சர்க்கரை கலந்து பாகுபதமாக காய்ச்சி இறக்க வேண்டும். வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

விக்கல் வரும் போது 1 கிண்ணம் அளவு தயிரை எடுத்து 1 தேக்கரண்டி உப்பு போட்டு மெதுவாக சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.

சிறிது படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீரால் முகத்தை சில நாட்கள் தொடர்ந்து கழுவி வந்தால் முகப்பருவினால்  தோன்றிய தழும்புகள் குறையும்.

கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.

சிறிதளவு கடலை மாவை பால் ஏட்டுடன் கலந்து குழைத்து இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பாக முகத்தில் பூசி வைத்திருக்க வேண்டும். பின்பு காலையில் எழுந்ததும் பயிற்றம் மாவை முகத்தில் தேய்த்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல் ஆகியவைகள்  குறையும்.

பப்ளிமாசு பழங்களை எடுத்து நறுக்கி அதனுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி சிறிது தேன் கலந்து காலை, மாலை குடித்து வந்தால் தும்மல் நீங்கும்.

அருகம்புல், மாதுளை இலை ஆகியவற்றை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி 50 மில்லி அளவாக இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் மூக்கிலிருந்து  இரத்தம் வருதல் குறையும்

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி விளக்கெண்ணெய் விட்டு வதக்கிச் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி மூக்கிலிருந்து இரத்தம் வருவது குறையும்.

நாயுருவி செடி விதைகளை காய வைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் மூக்கு சம்பந்தமான நோய்கள் குறையும்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119