கோவை மீன்மார்கெட்டில் அதிரடி சோதனை

கோவை உக்கடம் மார்க்கெட்டில்

Advertisement

விலை உயர்ந்த மீன்களில் விஷம்

Advertisement

மீன் ருசிகர்களுக்காக நமது “தமிழ்செய்தி” ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டோம்…..!

ஒருசில மீன் வியாபாரிகள் விலை உயர்ந்த மீன்கள் கெடாமல் அப்படியே புதியவையாக இருப்பதற்காக, மருத்துவமனைகளில் பிணம் அழுகி துர்நாற்றமடிக்காமல் பாதுக்க போடப்படும் பார்மலின் எனும் ரசாயன வேதிப்பொருட்கள் கலந்து விற்பனை செய்வதும் உண்டு….! அதை அரசு அதிகாரிகள் கண்டுபிடித்து அவ்வப்போது வழக்குகள் தொடுப்பதும் உண்டு…..!

அந்த வரிசையில் கடந்த சில வாரங்களுக்கு முன் கேரள  அரசு, நெல்லை – கேரள எல்லையில் உள்ள ஆரியங்காவு சோதனை சாவடியில், ‘ஆபரேஷன் சாகர் ராணி’ என்ற கேரளா தனிப்படையினர், தமிழகத்தில் இருந்து வந்த  மீன் லாரிகளை மறித்து சோதனை நடத்தி, இதில் தூத்துக்குடியில் இருந்து வந்த லாரியில் பார்மலின் கலக்கப்பட்ட 7 ஆயிரம் கிலோ மீன்களும், ராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து வந்த  லாரியில் 2 ஆயிரத்து 600 கிலோ பார்மலின் கலக்கப்பட்ட மீன்களும் கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில், 6 ஆயிரம் கிலோ உயர்ரக  இறால் மீன்களாகும். ஒரு கிலோ மீனில் 4.1 மில்லி கிராம் அளவுக்கு பார்மலின் கலக்கப்பட்டிருந்தது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து  இரண்டு மீன் லாரிகளையும் அதிகாரிகள் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பினர்.

இது மீன் ருசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்தது….!

மேலும் சென்னை காசிமேட்டிலிருந்து கேரளாவிற்கு மீன் ஏற்றுமதி வர்த்தகத்தில் ரூபாய் கோடிக்கணக்கில் பாதிக்கப்பட்டுள்ளது…!

கேரள மாநிலத்தில், ஆய்வகங்களில் உடல் உறுப்புகள் கெடாமல் பாதுகாக்க பயன்படுத்தப்படும் ரசாயனம் மூலம் மீன்கள் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து அந்த மாநில சுகாதார துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் கோவை உக்கடம் மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பதப்படுத்தப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி விஜயலலிதாம்பிகை, மீன் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் கொழுஞ்சி வளவன் மற்றும் அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது ஒரு சில கடைகளில் 10 கிலோ அளவுக்கு கெட்டுப்போன மீன்கள் இருந்தன. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

கேரளாவில் ரசாயனம் மூலம் பதப்படுத்தப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் கோவை உக்கடம் மார்க்கெட்டில் ஆய்வு செய்யப்பட்டது.

இங்கு மீன்கள் விற்பனை செய்யும் கடைகள் மொத்தம் 44 உள்ளன. இதில் ராமேசுவரம் பகுதியில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கேரளாவில் தற்போது மீன் பிடி தடைகாலம் உள்ளதால் அங்கிருந்து மீன்கள் எதுவும் விற்பனைக்கு கொண்டுவரப்பட வில்லை. கோவையில் ரசாயனம் மூலம் பதப்படுத்தப்பட்ட மீன்கள் எதுவும் விற்பனை செய்யப்பட வில்லை.

ஆய்வகங்களில் உடல் உறுப்புகள் கெடாமல் பாதுகாக்க பயன்படும் ரசாயனம் மூலம் மீன்களை பதப்படுத்தினால் அதிக அளவு ரசாயன வாடை அடிக்கும்.

மேலும் மீன்களின் காதில் உள்ள செதில்களை தூக்கி பார்க்கும் போது நல்ல சிகப்பு நிறத்தில் இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும், வெளிறி காணப்பட்டால் அந்த மீன் கெட்டுப்போனது என்று அறிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற ரசாயனம் கலந்து மீன்களை சாப்பிடும்போது உடல் உபாதைகள் ஏற்படும். வியாபாரிகள் யாராவது ரசாயனம் மூலம் பதப்படுத்தப்பட்ட மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119