ஆமணக்கு-நல்ல மருந்து…நம்ம நாட்டு மருந்து…

ஆமணக்கு விதைக்கு,  முத்துக்கொட்டை என்கிற பெயரும் உண்டு.

Advertisement
Advertisement

ஆமணக்கு பொதுவாகக் கசப்புச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இலை, வீக்கம் கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும். தாய்ப்பால் பெருக்கும்.

வாதநோய்களைக் குணமாக்கும்.

வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம், கட்டிகளை குணமாகும், ஆமணக்கு விதைக்கு,  முத்துக்கொட்டை என்கிற பெயரும் உண்டு.

இதிலிருந்து பெறப்படும் எண்ணெய்க்கு  முத்துக்கொட்டை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், விளக்கெண்ணெய் என்கின்ற பெயர்கள் உண்டு.

விளக்கு எரிப்பதற்காகவே ஆமணக்கு எண்ணெய் பழங்காலத்தில் பெருமளவில் பயன்பட்டதால் விளக்கெண்ணெய் என்கிற பெயர் பிரபலமானது.

ஆமணக்கு இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல அரைத்து எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் மட்டும் உள்ளுக்குள் கொடுக்க வேண்டும். 3 நாட்கள் இவ்வாறு செய்ய மஞ்சள் காமாலை குணமாகும்.

இந்த நாட்களில் உணவில் புளி, உப்பு நீக்கிப் பத்தியம் கடைபிடிக்க வேண்டும்.

3 தேக்கரண்டி விளக்கெண்ணெயுடன் சிறிதளவு இஞ்சிச்சாறு கலந்து உள்ளுக்குள் கொடுக்க மலச்சிக்கல் தீரும். பேதியாகும் வாய்ப்பும் உண்டு. அவ்வாறு ஏற்பட்டால் 2 டம்ளர் மோர் குடிக்கலாம்.

ஆமணக்கு இலையை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறையும்.

மார்பகக் காம்புகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் புண்கள் குணமாக ஆமணக்கு எண்ணெயைத் தூய்மையான, மெல்லிய பருத்தித் துணியில் ஊறவைத்து, அதை பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றாகப் போட்டுவர வேண்டும்.

4 தேக்கரண்டி அளவு ஆமணக்கு எண்ணெய், 1 தேக்கரண்டி அளவு தேன் ஆகியவற்றை நன்றாகக் கலந்து உள்ளுக்குள் சாப்பிட சுகபேதியாகும்.

சிறுவர்களுக்கு இந்த அளவில் பாதியும், கைக்குழந்தைகளுக்கு இந்த அளவில் நான்கில் ஒரு பங்கும் தரலாம். இது ஒரு சிறந்த கை மருந்தாகும்.

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க பசுமையான ஆமணக்கு இலையை நெய் தடவி, அனலில் இலேசாக வதக்கி, இளஞ்சூடான நிலையில் மார்பில் வைத்துக் கட்டலாம். அல்லது ஆமணக்கு இலையைச் சிறு துண்டுகளாக அரிந்து, தேவையான அளவு துவரம் பருப்பு சேர்த்து கீரையாகச் செய்து சாப்பிட்டு வர வேண்டும்.

ஆமணக்கு விதைகளைப் பச்சையாக / காய்ந்த நிலையில் அப்படியே சாப்பிடுவது மிகவும் நச்சுத்தன்மையானது, மரணம் கூட சம்பவிக்கலாம்.

விளக்கெண்ணெயில் உயர்தரமானது பழுப்பான வெண்மை நிறமாகவும், நல்ல மணத்துடன் கூடியதாகவும், படிவுகள் அற்றதாகவும் இருக்கும்.

தரம் குறைந்த ரகம் அடர்த்தியான மஞ்சள் நிறமாகவும், கனமாகவும், தெவிட்டலான மணம் கொண்டதாகவும் இருக்கும்.தரமான எண்ணெயையே உள்மருந்தாகக் கொடுப்பதற்குப் பயன்படுத்த வேண்டும்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119