விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்

360
1679
விளம்பர உலகம் வாய்ப்புகள் அதிகம்
Advertisement
Advertisement

வீடுகளில் கடைக்குட்டிதான் செல்லப்பிள்ளை என்பார்கள். இரண்டாவது, மூன்றாவது என்று பிள்ளைகள் பிறக்கபிறக்க முதல் பிள்ளை மீது கவனம் குறைவதுதான் பெரும்பாலான இடங்களில் இயல்பு.

இண்டர்நெட், தொலைக்காட்சி போன்ற புதிய வரவுகள் மத்தியில் வானொலி கொஞ்சம் ஒதுங்கியிருப்பது போல் தெரிந்தாலும், வானொலிக்கென்று என்றைக்கும் நேயர்கள் உண்டு.

வானொலி விளம்பரம் எழுதுவதில் ஒரு படைப்பாளரின் முழு திறமையும், வெளிப்பட வேண்டும். காதால் கேட்பதெல்லாம் மெய் என்று நம்பவைக்கும் வல்லமை, வசீகரம் இரண்டுமே வானொலி விளம்பரங்களுக்கு அவசியம்.

வானொலி விளம்பரங்களை உருவாக்கும் முன் சில அடிப்படைத் தகவல்களை மனதில் வைத்துக் கொள்வது நல்லது.

(i) விளம்பரப்படுத்தப்படும் பொருள் பொருளுகேற்ற உத்தி

புடவைக் கடை விளம்பரம் என்றால் விளம்பரப் பாடலாகவோ, உரையாடலாகவோ அமையலாம். உரையாடல், தோழிகள் உரையாடல் என்று விளம்பர எழுத்தாளர்களின் கற்பனைக்கேற்ப வகுத்துக் கொள்ளலாம்.

(II) எதைப் பதிய வைப்பது?

பெரும்பாலும் வானொலி விளம்பரங்கள் ஒருபெயரைப் பதிய வைப்பதிலேயே அக்கறை காட்டும். பல ஆண்டுகள் கடந்தாலும் எங்கேயோ கேட்ட ஒரு வானொலி விளம்பரத்தின் வாசகம் இன்றும் காதுகளில் எதிரொலிக்கிறது.

“சீமாட்டி, சீமாட்டின்னு பாராட்டி, பேசறாங்களே! யாருங்க அந்த சீமாட்டி” ஆர்வத்தை தூண்டுவது மட்டுமின்றி, அது சீமாட்டி சில்க்ஸ்தான் என்று கேட்பவரை யூகிக்க வைக்கும் உத்தியிலும் இது வெற்றிகரமான விளம்பரம்.

20 வினாடிகளுக்குள் விளம்பரப்படுத்தப்படும் பொருள் அல்லது கடையின் பெயர் 5 முறையாவது சொல்லப்பட்டால் அது வெற்றிகரமான விளம்பரம் என்று விளம்பர உலகின் எழுதப்படாத சட்டம் ஒன்று உண்டு. வாசன் பஞ்சாங்கம் விளம்பரம் இதற்கு காரணம்.

(III) விரைவாக – தெளிவாக வெளிப்படுத்துவது

இதில் விளம்பரப் படைப்பாளர் மட்டுமின்றி குரல் கொடுப்பவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம். அந்த வகையில் கிரவுன் காயகல்பம் விளம்பரம் குறிப்பிடத்தக்கது.

“கற்பக மூலிகைகளும் நவலோக பஸ்பங்களும் கொண்ட கிரவுன் காயகல்பம், இளமையிலும், முதுமையிலும், மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் இருக்க உதவி செய்கிறது” இதை நீங்கள் படிக்க எத்தனை வினாடிகள் ஆகின்றன? விளம்பர அறிவிப்பாளர் 7 நொடிகளில் படித்துவிட்டார்.

ஒரு பொருளின் விளம்பரத்திற்கு முக்கிய ஊடகமாக வானொலியைப் பயன்படுத்தக்கூடிய சூழல் இன்று இல்லை. ஆனால், நினைவுபடுத்தும் ஊடகமாக (Reminder medium) மிக நிச்சயமாய் வானொலி பயன்படும்.

இன்று எஃப்.எம். வாயிலாக மாநகராட்சிகளில் இழந்த இடத்தை வானொலி மீட்டு வருவதைப் பார்க்கிறோம்.

பல வானொலி விளம்பரங்கள், திரைப்பாடல்களின் மெட்டிலேயே உருவாக்கப்படுகின்றன. ஏனெனில், 15-30 வினாடிகள் வரை ஒரு இசையைப் பயன்படுத்தினால் அது காபிரைட் சட்டத்தின் பாதிப்பிற்குள் வராது. டிராக் இருப்பதால் உருவாக்க செலவும் குறைவு.

அதே நேரம், ஏற்கேனவே மனதில் பதிந்த பாடல் என்பதால் மக்கள் மனதில் விரைவாக சென்று சேர்ந்துவிடும்.

இது உயர்ந்து உத்தியாக கருதப்படுவது கிடையாது. ஆனால், தடாலடி தயாரிப்பாளர்கள் இதில் உடனே இறங்கி விடுவதுண்டு. அதுவும் 1994 – 95ல் இத்தகைய விளம்பரங்களை எக்கச் சக்கமாக எழுதி சென்னை FM ல் ஒளிபரப்பான போது எது பாடல், எது விளம்பரம், என்கிற குழப்பம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும்.

“சின்னராசவே… சரல்விக் ஸ்டவ் வாங்கிக் கொடுக்கனும்” என்று சித்தெறும்பை நசுக்கிவிட்டு அந்த இடத்தில் சரல்விக் ஸ்டவ் உட்கார்ந்து கொள்ளும் வேடிக்கையெல்லாம் நடந்தது.

குறுகிய கால சலுகைத் திட்டங்கள், விழாக்கால அறிவிப்புகள் போன்றவற்றிற்கு இந்த உத்தி மிக மிகப் பொருந்தும். ஆனால், ஒரு தயாரிப்பின் நீண்ட கால பெயருக்கு இந்த முறை பெரும்பாலும் உதவுவதில்லை. மாறாக, அதன் மதிப்பை குறைப்பதாகவே இருக்கிறது.

புதிதாக இசையமைத்து எழுதப்படும் விளம்பரப் பாடல்கள் மக்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடுத்துவிடுகின்றன. இன்று தொலைக்காட்சி வழியே புகழடைந்த பல விளம்பரங்கள் ஒரு காலத்தில் வானொலியில் புகழ் பெற்றவைதான்.

“ஆரோக்கிய வாழ்வினைக் காப்பாற்றும் லைப்பாயில்” இருந்து “பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு” வரையில் உங்கள் ஞாபக அடுக்குகளிலிருந்து நீங்கள் கூட நிறைய விளம்பரங்களை நினைவு கூர்ந்திட இயலும்.

இத்தகைய விளம்பரங்களை எழுதும்போது மூன்று முக்கிய விஷயங்களை விளம்பர எழுத்தாளர் மனதில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

(I) வேகம் (II) பாவம் (III) உள்ளீடு

வானொலி வாசிப்புக்கென்று ஒரு பொதுவான வேக அலைவரிசை உண்டு. பத்து விளம்பரங்களுக்கு மத்தியில் இந்த விளம்பரம் தனியாக இனம் காணப்படும் என்பது அதன் வேகத்தைப் பொறுத்துள்ளது. குறிப்பிட்ட 20 அல்லது 30 விநாடிக்குள் அந்த விளம்பரத்தை ஏற்ற இறக்கத்தோடு வாசித்துவிட முடியுமா என்பதை எழுத்தாளர் பல முறை வாசித்துப் பார்க்க வேண்டும்.

பாவம்: நாட்டியம் போலவே குரலுக்கும் சில பாவங்கள் வேண்டும். விளம்பர வாசிப்பு என்ன தொனியில் இருக்க வேண்டும் என்பதை எழுத்தாளர்தான் முடிவு செய்வார். ஆர்வம் தெறிக்கும் தொனி, காதல் தொனி, சவால் தொனி என்று விளம்பரமாகும் பொருளுக்கு உகந்த உத்தியும் அந்த தொனியும் விளம்பரத்தில் அமையுமாறு பார்த்துக் கொள்வது முக்கியம்.

உள்ளீடு:

விளம்பர வாசகங்கள் அமைப்பு எவ்வளவு கவர்ச்சிகரமாக அமைகிறது என்பதே அந்த விளம்பரத்தின் உள்ளீடு தெளிவாகவும், சுருக்கமாகவும் கேட்பவர்களை ஈர்க்கும் விதமாகவும் அமைய வேண்டும்.

இன்றும் மக்களின் நம்பிக்கைக்குரிய ஊடகமாக வானொலி திகழ்கிறது. அதனை சரியாக பயன்படுத்தினால் இப்போதும் ஜொலிக்கலாம்.

SHARE